சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு மாத ஊதியம் வழங்குவோம் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சபாநாயகர் அப்பாவு நேற்று சென்றார். அப்போது அங்கு அளிக்கப்பட்டு வரும் பல்வேறு சிகிச்சைகள் இடம் பெற்றுள்ள வசதிகள் குறித்து அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக நெல்லையில் இருந்து கலெக்டர் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளார்.

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் களத்தில் நின்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். வெள்ள நிவாரண பணிக்காக முதல்வர் ஒரு மாத ஊதியம் வழங்கியுள்ளார். எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பெதம் இன்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு மாத ஊதியம் வழங்குவோம். தமிழகத்தில் மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை 36 மணி நேரத்தில் 48 சென்டிமீட்டர் அளவிற்கு கொட்டியது.

தமிழகத்தில் கடல் மட்டத்திற்கு அலைகளின் சீற்றம் இருந்ததால் வெள்ள நீர் வடியவில்லை. 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய மழை வெள்ளத்தில் 24 மணி நேரமும் கண் விழித்து அனைவரையும் காப்பாற்றி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.