உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது மனநிறைவை தந்திருக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது.
பல்வேறு இன்னல்களை கடந்து இக்கட்டான சூழலிலும் சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையினர், இந்திய ராணுவத்தினர், பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை மிஞ்சும் அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இயந்திரங்களை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், மீட்பு மற்றும் குழாய் அமைக்கும் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பங்கு, தொழிலாளர்களை உயிருடன் மீட்க பேருதவியாக இருந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
சுரங்கத்திலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, இந்த சுரங்க விபத்தை முன்னுதாரணமாக கொண்டு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போது தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து ஏற்படும் பட்சத்தில் மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.