ராணிப்பேட்டையில், அதிமுக மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பேசிய அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனிசாமி. ஒ.பி.எஸ் அரசியலில் காணாமல் போன நபர் என பேச்சு. ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழகத்தின் கட்சி தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அலுவலகத்தின் அதிமுக கட்சி கொடியை ஏற்றி அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு பூ மலர்களை தூவி மரியாதை செலுத்தி பின்னர், கட்சியின் தலைமை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவிக்கையில்;

பாஜகவுடன் எப்போதும் அதிமுக கட்சி கூட்டணி இல்லாததால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையும் என ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக எழுப்பிய கேள்விக்கு ஓ.பி.எஸ் அரசியலில் காணாமல் போன நபர் எனவும், அவரது கேள்விக்கு பதில் சொல்வது அவசியமாய் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருப்பதாகவும், சமூக விரோதிகள் பயன்படுத்தக்கூடிய கஞ்சா, சாராயம் போன்ற பொருட்கள் சரணமாக தமிழகத்தில் கிடைக்கப்படுவதால் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் வழிப்பறி மற்றும் ஆதாயா கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குற்றவாளிகள் எளிது தப்பிக்கக்கூடிய அளவிற்கு சட்ட ஒழுங்கு இருப்பதாகவும், பொதுமக்கள் சாலையில் நடமாடுவதற்கு கூட அஞ்சுவதாக கூறினார். பிறகு உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளைத் தனமாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும், திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என வாக்குகளை அபகரிப்பதற்காக பொய்யான வாக்குறுதியை தவறாக அளித்து இருப்பதாகவும், திமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆளுநரிடம் வழங்கப்பட்டு இருப்பதை போலவே திமுக கட்சியினரும் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வேன் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழகத்தில் 50 லட்சம் மக்களிடம் கையெழுத்தினை பெற்று நீட் தேர்வை ரத்து செய்ய போவதாக மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள திராவிட கட்சியின் முன்னாள் தலைவர்களை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்து குறித்து, கேட்ட கேள்விக்கு திராவிட கட்சிகளின் தலைவர்களை பற்றி வரலாறு தெரியாமல் பேசி வரும் பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்.

தமிழகம் அனைத்து தொடர்களிலும் முதல் மாநிலமாக விளங்குவதற்கு 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி தான் காரணம் எனவும் இதை பற்றி எல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை எனவும் ஊடகங்கள் மத்தியில் வரலாறு பேசுவதாக கூறி தவறானதை பேசி வருவதாகவும் பெரியார் மற்றும் அண்ணாவை போன்ற தலைவர்களை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எவ்வித தார்மீக அருகதையும் கிடையாது என பேசினார்.