தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை (09-10-2023) தொடங்கி நாளை (11-10-2023) புதன்கிழமை வரை நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது . இரண்டாம் நாளான இன்று நீண்ட நாட்களாக சிறைவைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக் கோருவதற்கான கவன ஈர்ப்பு மனுவின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்றது .
இந்த விவாதத்தின் போது தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது .
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கவன ஈர்ப்பு மசோதாவின் போது பேசிய அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி நிகழந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பலியாகினர் .

மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது , 20 கும் மேற்பட்டோர் பல்வேறு குற்றப்பிரிவுகளில் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது . இதன்மூலம் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 40 கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் . இவர்களில் இரு சிலர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.
2021 சட்டமன்ற தேர்தலின்மூலம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு , கடந்த 15-11-2021 அன்று போடப்பட்ட அரசாணையால் எஞ்சியுள்ள முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை அடைவது தடைப்படுவதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர் .
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோள் முதலியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சி தலைவராக வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார் .

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இறுதியில் பேசிய திமுக கட்சி தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி வருவதற்கு முன்னதாக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக கட்சி கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? அதை நான் அறிய விரும்புகிறேன் என்று எதிர் கேள்வி எழுப்பினார் .
அதிமுக ஆட்சிக்காலத்தில் தருமபுரியில் பேருந்தில் பயணித்த அப்பாவி மாணவிகள் உயிரோடு எரித்தவர்களை விடுதலை செய்த அதிமுக கட்சி ஏன் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்யவில்லை ?
இஸ்லாமியர்களை பற்றி சற்றும் அக்கறைகொள்ளாமல் ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்மூடி தனமாக ஆதரித்த அதிமுக கட்சி , தற்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் அக்கறையும் பாசமும் கொள்வது ஏன் என்று இங்கு அவையிலுள்ள அனைவருக்கும் தெரியும் என பேசினார் .

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி , 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ய திமுக கட்சியினர் காட்டிய ஆர்வத்தை ஏன் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்புடைய இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் காட்டவில்லை என்று எதிர் கேள்வி எழுப்பினார் .
அப்பொழுது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு காத்திருக்கிறது. அக்கோப்புக்கு அனுமதி தரக்கோரி ஆளுநருக்கு அதிமுக அழுத்தம் தர தயாரா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார் .
இந்நிலையில் சட்டப்பேரவையில் தங்களுக்கு பேச அனுமதி தரவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் . இதனால் சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .