கோவை மாவட்டம், அக். 31- 2019 இல் தான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருந்த போதிலும், அதிமுக ஆட்சியில் இருந்த அந்த 2 ஆண்டுகள் தம்மை எந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஜனநாயகத்தை பற்றி வகுப்பு எடுக்கிறார்கள். ஜனநாயகத்தை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடுமையாக சாடினார்.
மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் பி.ஆர்.நடராஜன் எம்பி., தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மோ.சர்மிளா முன்னிலை வகித்தார். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகள் குறித்து பேசப்பட்டது. பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் மேம்பால பணிகளையும், அனுகு சாலையையும் டிசம்பருக்குள் முடிப்பது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று அவிநாசிசாலை செங்கப்பள்ளிவரையில் ஆறுவழிச்சாலையாக உள்ளது. இதற்கு அடுத்து உள்ள நான்கு வழிச்சாலை வாகனங்கள் செல்வது ஏதுவாக நல்ல சாலையாக உள்ளது.
அதேநேரத்தில், இந்த ஆறுவழிச்சாலையில்தான் ஏராளமான சுங்கச்சாவடிகளை அமைத்து வசூல் செய்து வருகின்றனர். ஆனால் ஆறு வழிச்சாலை மேடு, பள்ளமாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். மேலும், டில்லியில் இத்துறையின் தலைவரிடத்தில் பேசியுள்ளேன். உடனடியாக இந்த ஆறுவழிச்சாலையை புதிய சாலையாக போடவேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். இப்போது இக்கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

இதேபோன்று, பில்லூர் குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் என பேசப்பட்டது. மூன்றாவது குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளது. இரண்டு கிலோ மீட்டர் பணிகள் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. அது டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்றாவது குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்தால் 27எம்எல்டி தண்ணீர் கோவை மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும். இதனை நல்ல முறையில் பயன்படுத்துவது என பேசப்பட்டது. மேலும், கிணத்துக்கிடவு, பொள்ளாச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
இதனை சரிசெய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இதுபோன்று மாவட்டத்தின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் அக்கறையோடு விவாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், அதிமுக எம்எல்ஏக்களையும் அதிக அளவில் இருப்பதால் கோவை புறக்கணிக்கப்படுவதாகவும் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், 2019 இல் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தது.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போதிலும் அந்த காலகட்டத்தில் ஒரு அரசு விழாவுக்கும் தன்னை அழைக்கவில்லை. எந்த அழைப்பிதழிலும் எனது பெயர் இடம்பெறவில்லை. ஜனநாயகத்தை பற்றி பேச அதிமுகவிற்கு யோக்கியதையே கிடையாது. அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அப்படிப்பட்ட நபர்கள் இன்று ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்கள். யாரும் இவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்திலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் தவறாமல் இடம்பெறுகிறது. நாம் செய்ய தவறியதை திமுக அரசின் நிர்வாகம் செய்கிறது என அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்திற்கு நான் தான் சேர்மன், நான் இல்லையென்றால் துணை சேர்மன் ஆக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார். மாவட்ட ஆட்சித் தலைவர் இக்குழுவுக்கு செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லையென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சார் ஆட்சியர் கூட்டத்தை நடத்தலாம் என வழிகாட்டு நெறிமுறைகளே உள்ளது. மேலும், ஆட்சியர் வேறு ஒரு அலுவல் உள்ளதால், இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாது என ஏற்கனவே எங்களிடம் தெரிவித்துவிட்டுத்தான் சென்றார். ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

கடந்த 5 ஆண்டுகள் பதவியில் இருந்த சூழலில் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் அவற்றில் 18 சதவீதம் ஜிஎஸ்டி ஆக அதாவது 90 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக சென்று விடுகிறது. 4 கோடியே 10 லட்சம் தான் பணம் கிடைக்கும். அதுவும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 3 ஆண்டுகள் மட்டுமே நிதி கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிதியை கொரோனாவைக் காரணம் காட்டி பிரதமர் எடுத்துக்கொண்டு தனி விமானம் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார். இந்த நிதி தமிழ்நாட்டுக்கு வர வேண்டியது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மொத்தம் 17 கோடிகள் இந்த ஐந்து ஆண்டுகளில் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த 17 கோடி ரூபாய்க்குமான முழுமையான பணிகளை செய்துள்ளேன் என்றார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மற்றும் அவர்கள் கேட்ட தொகை வருவதற்கு உண்டான வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் நகலை கொடுத்துள்ளோம். மாநில அமைச்சரகத்தின் இடத்தில் இதனை பேசி பரிசீலித்து அமலாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக மாநகராட்சி ஆணையரும் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.