அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர்

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

- Advertisement -
Ad imageAd image

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை முழக்கம் அக்கட்சியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்லும் கீழ் ஒரு அணியும் உருவாகின. பின்னர், யாருக்கு அதிக மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருக்கிறது என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி வாகை சூடினார். அதிலிருந்து அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

எடப்பாடி

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேறியது.

இந்த பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு சட்டப்போராட்டங்களை ஓபிஎஸ் நடத்தினார். இருந்தபோதிலும், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக வந்தன. கட்சி நிர்வாகிகள் எடப்பாடியின் பக்கம் இருப்பதால், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும், அவர் பொதுச்செயாலளர் ஆனதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையத்திலும் இதுதொடர்பாக அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் அதிமுக தனது வேட்பாளரை அறிவித்தது. இதற்கு போட்டியாக ஓபிஎஸ்-ம் அங்கு வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், இரட்டை இலை சின்னத்தை கர்நாடகா தேர்தலில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தன்னை உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்குமாறு எடப்பாடி பழனிசாமி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.

பழனிச்சாமி

மேலும், இதுதொடர்பான அதிமுக சட்ட விதிகள், திருத்தங்களும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று அவசரமாக கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா,தினகரன்,ஓபிஎஸ்,இபிஎஸ என நான்கு பிரிவுகளாக இருந்த அதிமுகவிற்கு  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டது பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply