அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் தற்போது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இறுதி விசாரணையை ஏப்ரல் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதா? என்பதை இன்று முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். இன்று, இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடத்தலாம். அதற்குரிய தேதியை தெரிவிக்கும்படி இது தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.பின்னர், வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.