நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வலியுறுத்தப்பட்டு வரும் வேளையில், அதுதொடர்பாக நடிகர் விஷால் சூசகமாக தகவல் தெரிவித்தார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சில திரை பிரபலங்கள் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்ததால் அவர்களால் வரமுடியாமல் போனது. இதையடுத்து இப்போது அவர்கள் விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது;- விஜயகாந்த் மிகச்சிறந்த நடிகர் நல்ல மனிதர். தைரியமான அரசியல்வாதி. ஒரு மனிதன் இறந்த பின்பு அவரை சாமி என்பார்கள் ஆனால் வாழும் போதே ஏராளமான அவரை சாமி என்றே கூப்பிடுவார்கள். அவர் செய்த உதவிகள் அப்படி.
அவரது இறுதிப் பயணத்தில் நான் அறிந்திருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. இப்போது அவர் நினைவிடத்துக்கு வந்து என்னை மன்னித்துவிடு சாமி என்று கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைக்கப்படுமா என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு’-
அதற்கான பரிசீலனை நிச்சயம் இருக்கிறது. எம்.ஜி.ஆர் விஜயகாந்த் பெயர் இல்லாமல் எப்படி நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடையும். விஜயகாந்தின் பெயர் கண்டிப்பாக இருக்கும். நடிகர் சங்க கடனை தீர்த்து பத்திரத்தை மீட்டவர் விஜயகாந்த் தனி ஆளாக வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி காட்டினார். உரிமை சார்ந்த பிரச்சனைக்கு திரை உலகை திரட்டி போராட்டம் நடத்தினார். அவரது பெயரை முன்னிலையில் வைத்தால் அனைவருமே சரி என்று தான் சம்மதிப்பார்கள். இது ஒரு நிமிஷம் முடிவு தான்.

அந்த நிமிடம் வெகு விரைவில் வரும் நல்ல ஆத்மாக்கள் இருக்கும் பூமியில் உருவாகும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்தின் பெயர் கண்டிப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். விஷாலின் கருத்து நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் பூட்டப்படும் என்பதை சூசகமாகவே தெரிவிப்பது போலவே அமைந்தது. முன்னதாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு விஷால் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சங்க சார்பில் வருகிற 19 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.