விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் திரிஷா மன்சூர் அலிகான் நடித்திருந்தனர். ஆனால் எந்த காட்சியிலும் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. இது தொடர்பாக பேட்டியளித்த மன்சூர் அலிகான்; அப்போது பேசிய அவதூறு சொற்கள் கடும் சர்ச்சை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் மன்சூர் அலி கானுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் திரிஷா விட மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

அதற்கு திரிஷா தவறிழைப்பது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம் என்று சொல்லி மன்சூர் அலிகானை மன்னித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகிய மூவர் மீதும் வழக்கு தொடர உள்ளதாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தான் அளித்த பேட்டியை ஒரு வாரத்துக்குப் பின்பு எடிட் செய்து, திட்டமிட்டு பரப்பி உள்ளதாக மன்சூர் அலிகான் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக குஷ்பூ, திரிஷா, சிரஞ்சீவி மீதும் மேலும் சர்ச்சைக்குரிய வகையில் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். இதனால் மான நஷ்ட வழக்கு, நஸ்ட ஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை தொடருவதாகவும், சில ஆதாரங்களுடன் வழக்கு தொடுப்பதாகவும், மன்சூர் அலிகான் அப்போது தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மீது தலா 1 கோடி ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 3 கோடி பணம் கேட்டு மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் அன்று நடக்கிறது.