தேனி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக சார்பில் களம் இறங்கிய தங்க தமிழ்செல்வன் 57924 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி 3வது இடத்தில் நீடிக்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி லோக்சபா தொகுதி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடைசியாக 1996 ஆம் ஆண்டு தான். திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதற்கு முன்பு 1980-ல் மட்டுமே திமுக வென்றது.

இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும். காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019-களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் வாக்குகள் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தலித்துகள் இருக்கிறார்கள். இதேபோல் நாயுடு, கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள்.
தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. தேனி தொகுதியில் 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தேனி தொகுதியை பொறுத்தவரை தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. இந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.
அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் டிடிவி தினகரனுக்கு பிளஸ் ஆக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இங்கு டிடிவி தினகரனை எதிர்த்து அவரது முன்னாள் சிஷ்யரான தங்கதமிழ் செல்வன் திமுக சார்பில் நிறுத்தப்பட்டார். திமுக இந்த முறை காங்கிரஸ்க்கு தராமல் தானே களமிறங்கியது.
இதற்கு காரணம் டிடிவி தினகரனை எந்த வகையிலும் வெற்றி பெறவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் நாராயணசாமி நிறுத்தப்பட்டுள்ளார்.

பல வருடங்களாக சீட் கேட்டவருக்கு இந்த முறை தான் சீட் கிடைத்தது. இங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபாலன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ் செல்வன் 109641 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 51717 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 28439 வாக்குகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலன் 14489 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார். இதில் தங்கத் தமிழ் செல்வன் 57924 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனை விட அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.