- பாபநாசம் அருகே இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி, தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் போது, காய்ந்த தென்னை மட்டை மின்சாரக் கம்பியில் உரசி மரத்தின் மேலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கோவிந்தநாட்டு சேரி ஊராட்சி, புத்தூர் கிராமம் மேல தெருவில் வசித்து வருபவர் மதியழகன் (50). இளநீர் வியாபாரி. இவரது மனைவி லதா (40), நாகராஜன் (13) கேசவன் (12) என்ற மகனும் உள்ளனர்.
இளநீர் வியாபாரியான மதியழகன் தினம்தோறும், தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து விற்பனை செய்வது வழக்கம். வழக்கம்போல் இன்று காலை கபிஸ்தலம் அருகே அமைந்துள்ள மேட்டுத்தெரு கிராமத்தில் கொங்கன் வாய்க்கால் அருகில் அமைந்துள்ள தென்னை மரத்தில். இளநீர் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறி உள்ளார்.
அப்போது தென்னமரத்தில் உள்ள காய்ந்த மட்டை மின்சாரக் கம்பியின் மீது விழுந்தது. இதனால் இளநீர் பறித்து கொண்டிருந்த மதியழகன் தென்னை மரத்தின் மேலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 30-அடி உயரத்தில் ஏணி மரத்தை வைத்து, தென்னை மரத்தின் மீது ஏறி, உயிரிழந்த மதியழகனை கயிற்றைக் கட்டி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளநீர் வியாபாரி மதியழகன் இறந்த சம்பவம் மேட்டுத்தெரு மற்றும் புத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.