சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் எற முயன்று கீழே தவறி விழுந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலரை பொதுமக்கள் வெகுவாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவிந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள், சேலம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும். இந்த நிலையில், நேற்று டிசம்பர் 9 ஆம் தேதி இரவு யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரயில் (வண்டி எண்: 16527) நள்ளிரவு சேலம் ரயில் நிலையத்திற்கு நடைமேடையில் வந்து அடைந்தது. அப்போது, ரயிலில் இருந்து பயணிகள் மூன்று நபர்கள் கீழே இறங்கி அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலில் ஏற முயன்றனர்.

ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாகவே ரயில் புறப்பட்டு விட்டதைக் கண்டு, வேக வேகமாக ஓடி வந்து ரயில் ஏற முயன்றனர். அப்போது அவர்களில், ஒருவரான ஸ்ம்ருதி தேவராஜ் என்ற இளம்பெண் ஒருவர் பதட்டத்துடன் ஓடும் ரயில் ஏற முயன்றார். அப்போது பயணியின் நிலை தடுமாறி, ரயில் நிலைய நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே விழும் நிலைக்கு சென்றார். அப்போது அந்த இளம்பெண் கீழே விழுந்தார். இதைக் கண்ட பணியிலிருந்த ரயில்வே காவலர் அஜித், நொடிப்பொழுதும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு அந்த இளம்பெண் பயணியை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இடது காலில் சிறு காயத்துடன் இளம்பெண் பயணி ஸ்மிருதி தேவராஜ் உயிர் தப்பினார்.

ரயில்வே நிலையத்தில் உடனடியாக அந்த இளம்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்படவே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுத்த வந்த ரயிலில் மூவரும் கோழிக்கோடு செல்ல பத்திரமாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர். கீழே விழுந்த இளம்பெண் பயணியை விரைந்து காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளம்பெண் பயணியை ரயில்வே காவலர் காப்பாற்றிய சம்பவத்தின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அஜித்திற்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.