- தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த பெண் வெட்டி கொலை.. திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில், தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த புதுப்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே சாதரக்கோன்விளை பகுதியை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் கோவிந்தன் (வயது 21). கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமி (19). முத்துலட்சிமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்து என்பவருடன் திருமணம் ஆனது.
தீபாவளி என்பதால், தலை தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி தன் கணவருடன் சாதரக்கோன்விளைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவிந்தன் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த படுக்கப்பத்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரிடம் தனது நண்பர் ஒருவர் பெயரை சொல்லி அவரது முகவரி கேட்டுள்ளார். இதற்கு கோவிந்தன் சொல்ல முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கோவிந்தன் முகவரி கேட்டு வந்த வாலிபரை சத்தம் போட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் தனது ஊரை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு கோவிந்தன் வீட்டுக்கு வந்தனர். ஆனால் கோவிந்தன் வீட்டில் பெண்கள் மட்டும் இருந்ததால் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
பின்னர் ஒருநாள் கழித்து அதாவது நேற்று கோவிந்தனின் ஊரை சேர்ந்த போர்வெல் அமைக்கும் தொழிலாளியான மணிகண்டன் (வயது 40) என்பவரை சந்தித்துள்ளனர். அவரிடம் கோவிந்தன் வீட்டுக்கு வந்து சமரசம் பேசுமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து மணிகண்டன் மற்றும் படுக்கப்பத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தன் மற்றும் சிவனை அழைத்து சமரசம் பேசினர். அப்போது மணிகண்டனுக்கும் கோவிந்தனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை உண்டாது.
இதில் மணிகண்டன் கோவிந்தனின் தந்தை சிவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன், வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனால் சமரசம் பேச வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மணிகண்டனை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவிந்தன் மற்றும் சிவன் உடன்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
போலீசார் கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு மத்தியில் மணிகண்டனின் சகோதரர் தாஸ் கோவிந்தனை பழி தீர்ப்பதற்காக சிவன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவர் இல்லாததால் அவரது தங்கையான முத்துலட்சுமியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/israel-who-attacked-beyond-the-limit-will-iran-retaliate-america-has-warned-israel-iranian-people-are-in-constant-tension/
ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தலை தீபாவளி கொண்டாடுவதற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்த புதுப்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உடன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.