செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண்ணாடம் மத போதகரை அடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் மாமத்தூர் அருகே மண்டையூர் முருகன் கோவில் எதிரே தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இதன் எதிரே கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுக்கா சோழன் நகர் பகுதியை சேர்ந்த வீராசாமி என்கிற டேனியல் வயது 62. வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவர் மாமாத்தூர் மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி மத போதனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் டேனியலுக்கு 46 வயது பெண் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார். அப்போது டேனியல் தான் தனியாக தங்கி இருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியுள்ளார்.

அதற்கு சம்பந்தம் தெரிவித்து அந்த பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டிற்கு சென்று தங்கி அங்கு வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் டேனியல் மத போதனை செய்ய சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து உணவருந்தி விட்டு வீட்டில் இருந்தார். நேற்று காலை 6 மணி அளவில் டேனியல் வீட்டின் வாசலில் அந்தப் பெண் அழுது கொண்டு அமர்ந்திருந்தார். இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னவென்று விசாரித்த போது மத போதகர் டேனியலை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலன், மாத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், மண்டையூர் சப் இன்ஸ்பெக்டர் சௌந்தரராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியல் உடலை பார்வையிட்ட அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் செகஸ் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்தார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து கழற்றி வைக்கப்பட்ட செயின் மாட்டக்கூடிய பகுதியால் முகம் மற்றும் தலையில் அடித்ததில் அவர் இறந்து விட்டார் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே டேனியல் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.