வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 3 ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எடுத்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அத்துடன் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கைப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆவடியில் 190 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கொளத்தூர், திரு.வி. நகர், பொன்னேரி 150 மில்லி மீட்டர், அம்பத்தூர் 140 மில்லி மீட்டர், தலை ஞாயிறு, சோழவரம், ஆலந்தூர் 130 மில்லி மீட்டர், அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம், மதுரவாயில், செங்குன்றம், புழல், கோடம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, வளசரவாக்கம், பெரம்பூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை 110 மில்லி மீட்டர், தேனாம்பேட்டை, பெருங்குடி, மீனம்பாக்கம், வானகரம் 100 மில்லி மீட்டர், மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு நேற்று வந்தது. தற்போது அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் நடந்து தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு சென்று மூன்றாம் தேதி புயலாக வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் வாய்ப்புள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சேர்த்து நிலவுகிறது. அதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலையில் ஐந்தாம் தேதி வரை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். எனவே கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் செல்ல தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வெள்ளநீர் வெளியேற வடிக்கால் வசதிகளை மேற்கொள்ளவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.