மழை வெள்ள மீட்புப் பணிக்காக சென்னைக்கு சென்ற போது விக்கிரவாண்டியில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்தவர் ஜெயபால் மூர்த்தி வயது 50. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் சக துப்புரவு ஆய்வாளரான பழனி குரு வயது 50 என்பவருடன் சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்காக அரசு காரில் நேற்று முன்தினம் ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டார். காரி டிரைவர் முருகானந்தம் ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தனியார் கல்லூரி அருகில் நேற்று காலை 5 மணிக்கு சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயபால் மூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். முருகானந்தம் பழனி குரு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதைப்பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் சுங்கச்சாவடி மைய விபத்து பாதுகாப்பு வாகன ஊழியர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஜெயபால் மூர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த ஜெயபால் மூர்த்திக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு இரண்டு மகன்களும் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.