விழுப்புரத்தில் உரிய வரி செலுத்தாமல் ஓடிய புதுச்சேரி மாநில சுற்றுலா வேனை நேற்று சிறைபிடித்து விழுப்புரம் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த வேனுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதேபோன்று இன்று ஒரு சுற்றுலா வாகனத்தை விழுப்புரம் தனியார் வேன் உரிமையாளர்கள் சிறைப்பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். குறைந்த வாடகையில் சவாரி புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அதிக இருக்கைகள் உடைய வேன்கள், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் சவாரி ஏற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த வகை வேன்கள், தமிழ்நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமலும், உரிய பர்மிட் இல்லாமல் இயங்கி வருவதாலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, தங்களுடைய வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த வகை வேன்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாடகை வேன் டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். புதுச்சேரி வேன் சிறைபிடிப்பு இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் வீதியில் திருமண கோஷ்டியினரை ஏற்றிச்செல்வதற்காக புதுச்சேரியில் இருந்து வேன் ஒன்று விழுப்புரம் வந்துள்ளது. இதையறிந்த விழுப்புரம் புதிய பஸ் நிலைய சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள், இதுபற்றி வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் காமராஜர் வீதிக்கு விரைந்து சென்ற விழுப்புரம் வேன் டிரைவர்கள், அங்கு நின்றுகொண்டிருந்த புதுச்சேரி மாநில வேனை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு விரைந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தினர்.
அபராதம் விதிப்பு, அப்போது தமிழ்நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமலும், பர்மிட் இல்லாமலும் அந்த வேன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனின் உரிமையாளருக்கு அபராதம், பர்மிட் தொகை என மொத்தம் ரூ.40 ஆயிரத்தை அதிகாரிகள் விதித்தனர்.

தொடர்ந்து, இதுபோன்று பர்மிட் மற்றும் தமிழ்நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இயங்கும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோன்று இன்று விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச்செல்ல இருந்த புதுச்சேரி பர்மிட் கொண்ட வேன் ஒன்றை தனியார் வேன் உரிமையாளர்கள் சிறை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.