வாணியம்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து திடீர் தீப்பற்றி விபத்து. தனியார் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஜெயவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் இருந்து 42 மாணவர்கள் பள்ளி முடித்து விட்டு பள்ளி பேருந்து மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தனியார் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து 44 மாணவர்களுடன் பேருந்து ஒன்று வெள்ளக்குட்டை கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது தனியார் பள்ளி பேருந்தில் புகை வர தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் கோவிந்தராஜ் உடனடியாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உடனடியாக அவசர அவசரமாக மாணவர்களை பேருந்து விட்டு கீழே இறக்கி உள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பள்ளி பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனாலும் தீ மளமளவென எரியத் தொடங்கியதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிகழ்வு குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்பு கூடாக நின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் தனியார் பள்ளி பேருந்து தீ விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் டீசல் டேங்க் அருகில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்குள் தீ முழுவதும் பரவி பள்ளி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமாகியது. மேலும் பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமாகிய நிலையில், இந்த தீவிபத்து குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.