தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள தைனார் பாளையம் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. தமிழர்களின் மரபான புத்தாண்டு தை 1 என்பதால் ஆண்டின் நிறைவு நாளான மார்கழி கடைசி நாள் தங்கள் குல தெய்வமான வெள்ளந்தாங்கியிருப்பு வீரனார் அய்யனுக்கு பாளையக்கார வம்சத்தார் இந்த பொங்கல் விழாவை செய்து வருகின்றனர்.
அப்போது எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென பயிர்கள் நிறைந்த விவசாய பகுதியான நைனார்பாளையம் கிராமத்துக்கு 8 தலைமுறைக்கு முன்னர் கடலூர் மாவட்டம், வல்லம்படுகை அருகே உள்ள வெள்ளந்தாங்கியிருப்பு பகுதியிலிருந்து குடியேறிய சோழப்பேரரசின் நம்பிக்கைக்கு பாத்திரமாக 9 விளங்கிய பாளையக்காரர் குடும்பத்தினர் இந்த வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

போகிப்பண்டிகையான நேற்று காலையிலிருந்து ஆண்கள் விரதம் இருந்து சுமார் மாலை 3.00 மணியளவில் அப்பகுதியில் உள்ள பழைய குளக்கரையில் அமைந்துள்ள வெள்ளந்தாங்கி வீரனார் அய்யன் கோயிலுக்கு சென்று புதிய மண்பானை டெ அல்லது புதிய பித்தளை பாத்திரம் ஆகியவற்றில் 9 படி நெல்லில் கைக்குத்தல் மூலம் எடுத்த அரிசியில் பொங்கல் வைத்தனர்.
இதற்காக அடுப்பை மண்வெட்டிக்கொண்டு வடக்கு தெற்காக மண்ணில் பள்ளம் ஏற்படுத்தி, அதில் பானையை வைத்து கற்பூரம் ஏற்றி அதிலிருந்து தீயை மூட்டி பால் பொங்கும் வரையில் விறகை வைத்து எரியவைத்து பால் பொங்கியதும் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
பொங்கல் வைத்து பானையை இறக்கி வைத்துவிட்டு இரவு சுமார் 10.00 மணி வரையில் காத்திருந்து பொங்கல் பானையிலிருந்து வம்சத்திற்கு மூத்த பிள்ளைகள் படைப்பதற்காக ஒருபிடி சோறும், அரிசி ஒரு பிடி எடுத்தும் ஆலம் இலையில் வைக்கின்றனர்.
பொங்கலிட்ட அனைத்து ஆண்களும் வரிசையில் நிற்க வம்சத்தில் மூத்த குடும்பத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் படையல் போடுவார். வம்சா வழி பெரியவர் குருமணி என்பவர் வம்சத்தின் வரலாற்றை பாடலாக பாடி முடித்து படைக்கின்றார். அதுவரையில் வீட்டில் உள்ள பெண்கள் அவரவர்கள் வீட்டின் வாயிலில் குத்துவிளக்கு ஏற்றி காமாட்சி அம்மன் விளக்கையும் ஏற்றி அங்கேயே உள்ளனர்.
ஆண்கள் படைத்துக்கொண்டு பொங்கல் கூடைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் பெண்கள் எதிரே வரக் கூடாது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. பொங்கல் கூடையுடன் வீட்டினுள் சென்று பூஜை அறையில் இறக்கி வைத்துவிட்டு அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைப்பார். அப்போதுதான் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் வந்து சுவாமிக்கு தீபாராதனை செய்வார்கள். அதுவரையில் பெண்கள் எந்தவிதமான பொங்கல் வேலைகளையும் செய்வது கிடையாது.

பொங்கல் கூடையில் ஒரு பிடி அரிசியை எடுத்து சென்றதும் அந்த அரிசியை அடுத்த நாள் தைப்பொங்கலுக்கு கலந்து பயன்படுத்துவது வழக்கமாக இன்று வரையில் இருந்து வருகிறது. ஆண்கள் மட்டும் கொண்டாடுவது ஏன்? இது குறித்து பாலு என்வபவர் கூறுகையில்;- எங்கள் வம்சத்தை சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் போகியன்று குலதெய்வ வழிபாட்டு பொங்கலுக்கு தவறாமல் வந்து கலந்து கொள்வார்கள்.
குறிப்பாக கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் புஞ்சை மகத்து வாழ்க்கை மதுராநவாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுமார் 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருடம் தவறாமல் வருவார்கள். இந்த குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் அனைவரும் 8 தலைமுறைக்கு முன் ஒரு தந்தை மற்றும் ஒரு தாய் வழி வந்த ரத்த உறவுகள் என்பது குறிப்பிடத்தக்கது, என்றார்.