மினி லாரிக்குள்ளேயே மினி அரை. அதிர்ந்த போலீசார் மூட்டை மூட்டையாக எடுக்கப்பட்ட குட்கா போலீசாரையே மெக்கானிக்கர்களாக மாற்றிய பலே குட்கா திருடன் தென்காசி மாவட்டத்தில் அரங்கேறிய சுவாரஸ்யம்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள பறங்குன்றாபுரம் விளக்கு பகுதியில் சுரண்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியே வந்த மினி காய்கறி லாரியை மறித்து ஆய்வு செய்தனர். காய்கறி லாரி என எழுதப்பட்டிருந்த மினி லாரியின் பின்பக்க தொட்டியை பார்த்தபோது அதனுள் பேஸ்ட், பிரஸ் மற்றும் மளிகை பொருட்கள், மிட்டாய் பொருட்கள் அட்டை பெட்டிகளில் இருந்துள்ளன.

இதனால் மினி லாரியின் டிரைவர் பரங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் வயது (21) என்பது தெரியவந்தது. இவர் லாரியில் காய்கறி ஏற்றும் வண்டியில் எப்படி மளிகை பொருட்களை ஏற்றி செல்கிறாய் என டிரைவரிடம் போலீசார் கேட்டவுடனேயே முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் முழுவதுமாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக மினி லாரியின் பின்பக்க தொட்டியின் அடியில் மினி அறை ஒன்று இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் இரும்பு போல்டுகள் போட்டு தகர சீட்டுகளை கொண்டு தொட்டியை போன்றே பெயிண்ட் அடித்து அமைக்கப்பட்டிருந்த தனி அறையை ஸ்பேனர்கள் உதவியுடன் அதனை திறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அதனை கண்டு அதிர்ந்த போலீசார் மூட்டை மூட்டையாக கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை லட்சம் மதிப்பிலான 12 குட்கா மூட்டைகளை கண்டுபிடித்து எடுத்தனர். லாரி டிரைவர் கார்த்திக்கிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் மினி லாரியின் உரிமையாளர் பரங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் வயது (39) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நேரடியாக இளங்கோவன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு ஒரு கார் மற்றும் பைக் நின்றதை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சொகுசு காரின் டிக்கியிலும் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதை பொருட்களான குட்கா மூட்டைகளை அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று விற்பனை செய்வதற்காக இளங்கோவன் பயன்படுத்தி வந்த பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்பு 12 மூட்டை குட்கா, அதனை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய மினி பாதாள அறையுடன் அமைக்கப்பட்டு இருந்த மினி லாரி, சொகுசு கார் மற்றும் பைக் ஆகிய மூன்றையும் பறிமுதல் செய்து சுரண்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் டிரைவர் கார்த்திக் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் குட்கா கடத்துவதற்கென படங்களில் வருவதைப் போன்று மினி லாரியில் மினி அறையை அமைத்து போலீசாரையே அதிரசெய்யும் வண்ணம் கிருமினல் மூளையுடன் செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதால் போலீசாரின் இந்த செயல் பலரும் பாராட்டும்படி இருந்தது.