ஆம்பூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைக்கு செவிலியர் பணிக்கு வரும் பல பெண்களிடம் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. அந்த மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக கடந்த 4 ஆண்டுகளாக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு அந்த மருத்துவமனை மருத்துவர் நிவேதன் (30) கடந்த 15ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது பெற்றோர் உடனடியாக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் நடந்த இடம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் அந்த புகார் உமராபாத் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து உமராபாத் காவல் நிலைய போலீசார் மருத்துவர் நிவேதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது தலைமறைவாக உள்ள மருத்துவரை தேடி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செவிலியர் பணிக்காக வரும் பல பெண்களை நிவேதன் மாத்திரை இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று மாத்திரைகளை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ள சொல்லியும், அதனை மறைந்து இருந்து வீடியோ எடுத்து வைத்து மருத்துவர் செவிலியர்களை மிரட்டி வந்துள்ளார்.

இது போன்ற பாலியல் தொல்லை செய்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதனால் இது போன்ற செயலில் ஈடுபடும் மருத்துவர் மீது கடுமையான சட்டம் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கின்றனர்.