மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹30 லட்சம் வாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது ஒன்றிய செயலாளர் பகீர் குற்றச்சாட்டு.
மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் ரூபாய் 30 லட்சம் வாங்கியதாக சேலம் மாநகர அதிமுக செயலாளர் மீது ஒன்றிய செயலாளர் பரபரப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாஜலம். இவர் மீது சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜூ பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
இந்த புகார் கடிதத்தை அவரது வாட்ஸ் அப் குரூப்பிலும் வெளியிட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் கடிதத்தில் எனது மருமகன் ஜெகன். இவர் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் ரூபாய் 30 லட்சம் வாங்கினார். ஆனால் அந்த வேலையை வாங்கி தரவில்லை. அந்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் மருத்துவக் கல்லூரி அருகே ₹2.50 கோடி பிரச்சனைக்குரிய இடத்தை 55 லட்சம் ரூபாய்க்கு அவரது அக்கா மகனுக்கு வாங்கி கொடுத்தேன்.
அதற்கான கமிஷன் 20 லட்சம் ரூபாய் எனக்கு தரவில்லை. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்த போது அழகாபுரத்தை சேர்ந்த சுசீலா, ஜான்சன்பேட்டையை சேர்ந்த நர்மதா ஆகியோருக்கு அங்கன்வாடி சத்துணவு பணியாளர் வேலை தருவதாக 2 பேரிடம் தலா ரூபாய் 5 லட்சம் வாங்கிக் கொடுத்தேன்.

அந்த வேலையும் வாங்கி தரவில்லை. அப்போது அந்த பணமும் திருப்பி தரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிமுக கட்சியின் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.