கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென புகுந்த மர்ம நபர் அவர் வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த சமையல் கேஸ் அடுப்பின் கேஸ் வரும் குழாயை பிடுங்கி எறிந்துள்ளார். மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டினுள் புகுந்து கேஸ் அடுப்பின் குழாயை பிடுங்கியதால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கூச்சலிட்டுள்ளார்.
மேலும் அந்த மர்ம ஆசாமியிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம ஆசாமி அருகில் கிடந்த அருவா மனையால் முத்துலட்சுமியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த மர்ம நபரை விரட்டி சென்றனர். மேலும் வலியால் துடித்துக் கொண்டிருந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து தப்பி ஓடிய அந்த மர்ம நபர் அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உள்ளே மறைந்து கொண்டார். அவரை பின்னால் துரத்தி சென்றனர். அவரைப் பிடிப்பதற்காக உள்ளே சென்றபோது கோபுரத்தில் உள்ளே உள்ள மணல்களை மூஞ்சில் தூக்கி வீசி உள்ளார். கையில் பயங்கரமான ஆயுதங்கள் வைத்துக் கொண்டு பிடிக்க வருபவர்களை மிரட்டி உள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் மேற்கு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மற்றும் காவல்துறையினர், கோவில் கோபுரத்தில் ஏறி உள்ளே மறைந்திருந்த அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து கயிறு மூலம் கட்டி கீழே இறக்கினர். பின்னர் அந்த நபரை மேற்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த நபர் திருத்துறைப்பூண்டி வட சங்கேந்தி பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் சிவசங்கர் (35). என்பதும் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் சிவசங்கரின் மாமியார் மேல் மருவத்தூர் மாலை அணிவித்து மூன்று நாட்கள் அங்கே விரதம் இருந்து உள்ளனர். இதில் சிவசங்கர் மூன்று நாட்களாக சாப்பிடாமலும் தூக்கம் இல்லாமல் ஒரு வாரமாக மது அருந்தாமலும் இருந்துள்ளார். இதனால் சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். சிவசங்கரை அவரது சகோதரி சந்திரா மற்றும் உறவினர்கள் சேர்ந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு விட்டு திருத்துறைப்பூண்டிக்கு திரும்பி சென்ற போது கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பேருந்துலிருந்து குதித்து ஓடிய போது அவர சகோதரி சந்திரா மற்றும் உறவினர்கள் துரத்தியதால் முத்துலட்சுமி வீட்டில் புகுந்ததும்,
அப்போது முத்துலட்சுமி சிவசங்கரை தட்டி கேட்டதால் அவரை வெட்டி விட்டு ஓடி சென்று கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்து கொண்டதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.