விழுப்புரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் மாலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி தகவலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறையினர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகின்றது . இந்த வளாகத்தில் பிரபல துணி , காலனி , உணவகங்கள் மற்றும் அழகு நிலையங்களின் கிளைகள் அமையப்பட்டுள்ளன .
மேலும் இந்த வளாகத்தில் அந்த மாலுக்கு சொந்தமான காய்கறி அங்காடி , துணிக்கடை , பல்பொருள் அங்காடி மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய மூன்று திரைகள் கொண்ட பிரமாண்ட திரை அரங்கமும் செயல்பட்டு வருகின்றன .
விழுப்புரத்தின் ஒரு அடையாளமாக திகழும் இந்த வளாகத்திற்கு நாள் ஒன்றிற்கு விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 1000 திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லக்கூடிய முக்கிய வர்த்தக வளாகமாக இந்த மால் திகழ்கிறது .
இந்நிலையில் இந்த பிரபல தனியார் மாலிற்கு பிற்பகல் ஒரு மணி அளவில் கஸ்டமர் கேர் தொலைபேசி எண்ணிற்கு வெடிகுண்டு இருப்பதாக ஒரு தொலைபேசி வந்துள்ளது.
அந்த தொலைபேசியை நிறுவனத்தின் மேனேஜர் ஆனந்த் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் இருந்து பேசியவர் உங்களுடைய பேக்டரிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேனேஜர் மாலின் நிறுவனரிடம் இந்த வெடிகுண்டு மிரட்டல் பற்றி தெரிவித்துள்ளார். நிறுவனரின் அறிவுறுத்தலின்படி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் மேனேஜர் ஆனந்த் . தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மாலுக்கு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களை பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.
உடனடியாக மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு மாலின் பலப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன் பாதுகாப்பு காரணத்திற்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வளாகத்திற்கு அருகாமையிலேயே அரசு பள்ளிகள் , ஆரம்ப சுகாதார நிலையம் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருப்பதால் விழுப்புரம் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது .