புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ஆன்லைன் மூலமாக பணம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறை விசாரித்து வருகிறன்றனர்.
புதுச்சேரியில் சைபர் க்ரைம் குற்றங்கள் நாள் தோறும் நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமான நூதனமாக மக்களை ஏமாற்றும் வலைதள மோசடி கும்பல், ஆயிரம் முதல் லட்சம் வரையிலான பணத்தை லாவகமாக சுரண்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக சைபர் க்ரைம் காவல் பிரிவில் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றில் சில வழக்குகளில் பணத்தை மீட்டு புகார்தாரரிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.

நேற்று மேலும் 6 மோசடிகள் தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் பிரிவுக்கு புகார் வந்துள்ள நிலையில் அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி சாரத்தைச் சேர்ந்த பெண் ஊழியரிடம், வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்ட மர்ம ஆசாமியின் குறுந்தகவலை நம்பி மருத்துவ வர்த்தக செயலியில் ரூபாய் 1.15 லட்சம் செலுத்திய நிலையில் அவரது பணம் 5 பரிமாற்றம் தொடர்பான கணக்கு திடீரென முடிக்கப்பட்டது.
இதேபோல் மங்கலம் ஜெயக்குமார் என்பவரிடம் பகுதி நேர வேலை ஆசைகாட்டி ரூபாய் 42 ஆயிரம் மோசடி செய்யப்பட்டார். புதுச்சேரி லாஸ்பேட்டை நர்மதாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்ட மர்ம நபர், தோழி போல் ஆள் மாறாட்டம் செய்து ரூபாய் 12,500-ஐ நூதனமாக ஏமாற்றினார். மேலும் லாஸ்பேட்டை ஷெர்வின் என்பவரிடம் கடன் செயலாக்க கட்டணம் எனும் முறையில் ரூபாய் 12,500 மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிகள் தொடர்பாக சைபர் க்ரைம் காவல் பிரிவானது தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. இதேபோன்று காரைக்காலைச் சேர்ந்த சிலரிடமும் நூதனமான ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி பணம் மோசடி நடந்துள்ளது. இது பற்றியும் சைபர் க்ரைம் காவல் துறைக்கு புகார் வந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.