டேராடூன், சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா பகுதியில் மலையை உடைத்து 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்க சாலை அமைக்கும் பணி நடந்தது. கடந்த 12ம் தேதி திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து மண் சரிந்ததால் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவா்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒன்பதாவது நாளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி ஆகியோர் நேற்று மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ். சாந்துவும் உடனிருந்தார்.

மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே எங்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். இதனால் மீட்பு படைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
பிரதமர் மோடி நேற்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணி குறித்த முன்னேற்றங்களை கேட்டறிந்தார். மீட்பு பணியில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்க இடிபாடுகளில் நேற்று ஆறு அங்குள்ள அகலக் குழாய் அமைக்கப்பட்டது. இதற்கு முன் இங்கு நான்கு அங்குள்ள அகல குழாய் இருந்தது.

அதன் வழியாக உள்ளே சிக்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு உலர் பழங்கள், மருந்து, ஆக்சிஜன் போன்றவை அனுப்பப்பட்டன. தற்போது ஆறு அங்குல அகலக் குழாய அமைக்கப்பட்டிருப்பதால் ரொட்டி சப்ஜி போன்ற உணவுகளையும் அனுப்ப முடியும் என்றும் தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.