ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று (23.06.2024) காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி (வயது 50) க/பெ. பலவேசம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி (வயது 58) க/பெ.சித்திரைவேல் மற்றும் பார்வதி (வயது 35) க/பெ. குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் (வயது 55) க/பெ. (லேட்) சுந்தரம் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.