காரில் சாராயம் கடத்திய வழக்கில்பிரபல சாராய வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை.

0
41
சாராய வியாபாரி

காரில் சாராயம் கடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


காரில் சாராயம் கடத்தல்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆசூர் பகுதியில் கடந்த 6.10.2016 அன்று விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தபோது காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதில் வந்த 3 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.


பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்ததில், அந்த காரினுள் 500 லிட்டர் சாராய கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இதனை புதுச்சேரி மாநிலம் ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜா என்கிற ஆண்டியார்பாளையம் ராஜா (வயது 42), விக்கிரவாண்டி ஆசூரைச் சேர்ந்த காண்டீபன் (40), மாரி என்கிற அய்யப்பன் (45) ஆகிய 3 பேரும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


3 பேருக்கு சிறை


இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அகிலா, குற்றம் சாட்டப்பட்ட ஆண்டியார்பாளையம் ராஜா, காண்டீபன், மாரி ஆகிய 3 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டியார்பாளையம் ராஜா மீது விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு சாராய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here