கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை தாமதாக மேற்கொள்ளும் சூயஸ் நிறுவனத்திற்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூபாய்.3,167 கோடிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்-69 ல் உள்ள பாரதி பார்க்கில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை கோவை மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று ஆய்வு செய்தார். கோவை மாநாகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பாரதி பார்க் பகுதியில் சூயஸ் நிறுவனம் கட்டிவரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ஆய்வு செய்தார்.
அப்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 9 மாதங்கள் கடந்து, 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கி மந்தகதியில் நடைபெற்று வருவது ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து சூயஸ் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் தாமதமாக பணிகள் நடைபெற்று வருவது குறித்து விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் சூயஸ் நிறுவனம் கட்டுமான பணியின் போது தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இன்றி செயல்பட்டதற்காக 10 லட்ச ரூபாய் அபராதம் இந்நிலையில் சூயஸ் நிறுவனம் மீது ஓரே வாரத்தில் அடுத்த அபராத நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.