திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2330 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் புனல் மின் திட்டத்தின் வாயிலாக 75 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து இன்று 2330 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாயத்திற்கு சாத்தனூர் அணை பெரும் உதவியாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகளும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகளும் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை, செங்கம் புதுப்பாளையம் உள்ளிட்ட 249 கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பிற பகுதிகளான தானிப்பாடி, வாணாபுரம், லாடாவரம் கூட்டு குடிநீர் திட்ட மூலம் சுமார் 322 கன அடி நீர் ஓராண்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சாத்தனூர் புனல் மின் திட்டத்தின் வாயிலாக 75 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. தற்போது அணை நீர்மட்டம் 117.10 அடியாக உள்ளது. பருவ மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணையில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்படி புனல் மின் நிலையம் வழியாக 950 கன அடி நீரும், மதகு வழியாக 1380 கன அடி நீரும் என மொத்தம் 2330 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து இன்று 2330 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.