மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் 2024 இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .
2024 மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் , (பிப்ரவரி 1) ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட்டாகும் .
மேலும் பிரமர் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் கடைசி பட்ஜெட்டாகவும் திகழ்கிறது. இந்த பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பு நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் பாரம்பரிய மரபும் அரங்கேறியது . அதன்படி, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை நேற்று சந்தித்தார்.
அதன்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , சரியாக 11 மணிக்கு, இடைக்கால பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அவைகள் பின்வருமாறு ”மத்திய அரசின் திட்டங்களால் அனைத்து மாநிலங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றன. மக்களின் வருவாய் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்.
சூரிய மேற்கூரை வீடுகளுக்கு ரூ.300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா இரண்டு இடங்களில் தொடங்கப்படும். ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம். வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். 49ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகராக மேம்படுத்தப்படும். மத்திய பாதுகாப்புத்துறைக்கு ரூ. 11. 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு இருப்பதால் வருமான வரி ரீஃபைண்ட் 93 நாட்களுக்குப் பதில் 10 நாட்களிலேயே தரப்படுகிறது .
உணவு குறித்த மக்களின் கவலையை மத்திய அரசு அகற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவது 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோருக்கு ரூ. 30 கோடி முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால வளர்ச்சியைப் பார்த்து பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள். விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய நான்கு தரப்பினர் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் 9 வயது முதல் 18 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசிபோடும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலாத்துறையில் ஆன்மிக சுற்றுலாவுக்குப் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
2023-24ல் திருத்திய மதிப்பீட்டின்படி, அரசின் மொத்த செலவு ரூ. 40.90 லட்சம் கோடி ஆகும். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பழைய நிலையே தொடரும்.கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம்(சிரித்தவாறு)” என்றார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 58 நிமிடங்கள் வாசித்தார்.