கமலாலயத்தை தி.மு.க.வினர் தாக்கிய வழக்கில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ராமர் பாலம் சர்ச்சை தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா மற்றும் பிற இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பா.ஜனதா முன்னாள் எம்.பியுமான ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்தார். இது தி.மு.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கமலாலயத்தின் அலுவலக கண்ணாடி சேதம் அடைந்தது.
தி.மு.க.வினர் கற்களை வீசியதில் முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மாநில முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரு.வி.க.நகர் தி.மு.க. பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா துணை தலைவர் வக்கீல் பால்கனராஜுடன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/scarcity-of-water-danger-of-salt-water-mixing-perumpakkam-villagers-near-tiruvallur-staged-a-road-blockadeprotest/
அப்போது, கமலாலயம் தாக்கப்பட்டது குறித்தும், அங்கிருந்த தனக்கும், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது குறித்தும் அவர் சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. வக்கீல் தூயமணி, தமிழிசை சவுந்தரராஜனிடம் குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணையின் போது தி.மு.க. வக்கீல் எழுப்பிய கேள்விக்கு, தமிழிசை பதிலளித்தார்.
இதன்பின்பு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.