ஓசூரில் நேற்று அதிகாலை 15-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இரண்டு ரவுடிகளை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் வயது 31. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பர்கள் ஓசூர் பழைய வசந்த நகரை சேர்ந்த பொன்வண்ணன் என்கிற சிவா வயது 27. ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த பக்கா என்கிற பிரகாஷ் வயது 28 இவர்களில் பொன்வண்ணனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பிரகாஷின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இவர்கள் மூன்று பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக பிரகாஷ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று முன்தினம் விடுதலை ஆனார். அவரை பர்கத், பொன்வண்ணன் ஆகியோர் சேலத்தில் ஓசூர் பார்வதி நகருக்கு கார் மூலம் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு அழைத்து வந்தனர். காரில் இருந்து பிரகாஷ் வீட்டிற்குள் சென்றார்.

பின்னர் பர்கத்தும், பொன்வண்ணனும் அங்குள்ள தெருவில் நடந்து சென்ற போது 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் சுற்றி வளைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியது. அப்போது பொன்வண்ணனை அறிவாளால் அந்த கும்பல் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் பொன்வண்ணனின் தலையை துண்டித்து அந்த கும்பல் தெருவில் வீசியது. இதை பார்த்த பர்கத் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பிரகாஷை அந்த கும்பல் துரத்தியது. அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பர்கத், பிரகாஷின் வீட்டிற்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். இதில் இருந்தும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் வீட்டின் கதவு ஜன்னல் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பர்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனிடையே தப்பி சென்ற பிரகாஷ் ஓசூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பொன்வண்ணன் மற்றும் பர்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான பர்கத் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர தலைவராக இருந்து, பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.