பெரம்பலூரில் ஷோல்டர் பேக்கில் 16 கையேறி நாட்டு வெடிகுண்டுகள் – போலீசார் விசாரணை..!

2 Min Read

பெரம்பலூரில் கேட்பாரற்று கிடந்த ஷோல்டர் பேக்கில் நேற்று கண்டறியப்பட்ட 16 குண்டுகளும், கையேறி வகையை சேர்ந்த நாட்டு வெடி குண்டுகள் என்பதை வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அகதிகள் முகாமிற்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் பயன்படுத்தாத அரசு புறம்போக்கு இடத்தில் நேற்று கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஷோல்டர் ட்ராவல்
பேக்கை, காலி மதுபான பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கீர்த்தீபன் வயது (31) என்ற வாலிபர் திறந்து பார்த்துள்ளார்.

ஷோல்டர் பேக்கில் 16 கையேறி நாட்டு வெடிகுண்டுகள்

இந்த பேக்கில் வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கீர்த்தீபன் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தகவலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த ட்ராவல் பேக்கை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதோடு, திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அந்த பையை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

ஷோல்டர் பேக்கில் 16 கையேறி நாட்டு வெடிகுண்டுகள்

இந்த ஆய்வில் ட்ராவல் பேக்கில் கண்டறியப்பட்ட 16 குண்டுகளும் கையேறி வகையைச் சேர்ந்த நாட்டு வெடிகுண்டுகள் என்பதை நிபுணர்கள் உறுதி செய்ததோடு, அதனை பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் வெடி குடோனில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில், பெரம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் (தெற்கு) ராஜதுரை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் போலீசார் இந்த கையேறி வெடிகுண்டுகளை யார்? எதற்காக கொண்டு வந்து இப்பகுதியில் வீசி சென்றனர்? ஏதாவது அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த கொண்டு வரப்பட்டதா? எந்த ஊரிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது? பெரம்பலூர் பகுதியில் உள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், செல்போன் அழைப்புகளையும் ஆராய்ந்து வருகின்றனர். பெரம்பலூரில் கேட்பாரற்று கிடந்த ட்ராவல் பேக்கில் 16 கையேறி நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Share This Article
Leave a review