சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. காரைக்குடியில் காதலனை நம்பிச் சென்ற 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த, 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள் தகவல் பரிமாறி வந்துள்ளனர். நாளடைவில் அந்த சிறுமியும், சூர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் சிறுமி, கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு காதலன் சூர்யாவை சந்திக்க காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை அருகே சென்றுள்ளார்.

அங்கிருந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தைல மரகாட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ற காதலன் சூர்யா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு தனது நண்பர்கள் செல்போனில் வரழைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவு முழுவதும் வீட்டுக்கு செல்லாமல் இருந்த சிறுமி பயந்து போய் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமியின் உறவினர் சிறுமியை காரைக்குடிக்கு அழைத்து வந்து விட்டுள்ளார். இந்நிலையில் மகள் காணாமல் போன நிலையில், உறவினர் அழைத்து வந்து விட்டு சென்றது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர் விசாரித்தபோது, தன்னை காதலன் சூர்யா ஒரு தைல மரகாட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, அங்கு கட்டாயப்படுத்தி மது குடிக்கச்செய்தார். பிறகு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் விடாமல் தனது நண்பர் நிஷாந்தை வரவழைத்தார். அவரும், அவருடைய நண்பர்கள் அங்கு வந்தனர்.

அவர்களும் தன்னை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டினர் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காரைக்குடி மகளிர் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த சிலர், சூர்யா, நிஷாந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிக்கு வரவழைத்தனர். அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவல் அறிந்ததும், மருத்துவமனைக்கு சென்ற போலீஸார், சூர்யா, நிஷாந்த் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வினோத்குமார் (20), வேலு (20) உள்பட மேலும் 6 பேரை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவர்களையும் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியை 34 மணி நேரம் தங்களது கட்டுப்பாட்டில் இந்த கும்பல் வைத்திருந்ததும், தைல மரகாட்டுப்பகுதியில் இருந்து மேலும் 2 இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், வேலைக்காக வெளியூர் சென்ற அவர்களை பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.