ஆந்திர மாநிலத்தில் இருந்து பெருமளவில் கஞ்சா சென்னை வழியே கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு சாலை அருகே அதி வேகமாக வந்த லாரி ஒன்றை மடக்கி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது லாரியில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கோவைக்கு கடத்தி செல்ல முயன்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடாசலபதி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தச்சூர் கூட்டு சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாரி ஓட்டுநர் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வரப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.