சேலத்தில் 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், அடுத்த காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது விடுமுறை நாட்களில் அவர் நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். அப்போது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்படி விளையாடச்சென்ற சிறுவன் மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, 2 திருநங்கைகள், சிறுவனிடம் ஆசையாக பேசி, பிரியாணி வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இனிமேல் யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு அடுத்த வாரம் மீண்டும் விளையாடச் சென்ற சிறுவனை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்துச் சென்று 4 மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் காக்காபாளையம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக் (எ) காயத்ரி வயது (26), முல்லை வயது (25) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இருவரும் கோவை பெண்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அப்போது சிறுவனுக்கு திருநங்கைகள் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அதை தொடர்ந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.