சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – கே.பாலகிருஷ்ணன்

0
71

கடுமையான தொழில்நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் சுமார் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருவதும் இத்தகைய தொழில் நிறுவனங்களேயாகும். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா பேரிடர் போன்றவைகளால் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பையும், இழப்பையும் சந்தித்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது மின் நிலைக்கட்டணம் உயர்வும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின்

குறிப்பாக, மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், எல்.டி 111 – பி என்ற மின் இணைப்பை பெற்றவர்கள். மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர்கள் இடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் இல்லை. 100 சதவிகிதம் மின்வாரியத்தை சார்ந்தே தொழில் செய்து வருகிறார்கள்.

டிமாண்ட் சார்ஜ், புதிதாக விதிக்கப்பட்ட பீக் ஹவர் கட்டணத்தினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவர் லூம் தொழில் உள்ளிட்டு ஜவுளித் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து தொழில் செய்ய முடியாமல் மூடும் ஆபத்தில் உள்ளது. இதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன்

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் 6 கோரிக்கைகளை சுட்டிக்காட்டி அதனை உடனடியாக நிறைவேற்றி தமிழ்நாட்டின் கேந்திரமாக செயல்படும் குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களையும், இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here