டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா தொடர்பாக நடந்த காரசார விவாதத்தின் போது டென்ஷனான ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா நேற்று ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டது. மதியம் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட நிலையில், இரவு வரை இது குறித்த விவாதம் நடைபெற்றது. அதன் பின்னரே இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகள் பதிவான நிலையில், இதற்கு எதிராக 102 வாக்குகள் பதிவானது. இதன் மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
கடுகடுத்த தன்கர்:
இருப்பினும், இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பல காரசார கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சை முடித்துக் கொள்ளுமாறு அவை தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்ட போதும், அவர் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஜக்தீப் தன்கர் சில கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
டெரிக் ஓ பிரைனை பார்த்து ஜக்தீப் தன்கர், “இது உங்கள் பழக்கமாகிவிட்டது. இதை நீங்கள் உங்கள் உத்தியாகவே வைத்துக் கொண்டீர்கள். வெளியே விளம்பரத்தைப் பெற இப்படியெல்லாம் செய்கிறீர்கள். இந்த அவையின் மாண்பை அழிக்கிறீர்கள். முதலில் உட்காருங்கள். இங்கே டிராமா செய்யவா வந்தீர்கள். நீங்கள் இதற்காகவா பதவியேற்றீர்கள். ஓவராக புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறோம் என நினைத்துச் செய்வது ஒருபோதும் பலனளிக்காது. தனது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இங்கே ஒரு உறுப்பினர் இருக்கிறார். இது நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்” என்று அவர் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், திரிணாமுல் எம்பியின் பேச்சின் ஒரு சில பகுதிகளை நீக்கவும் தன்கர் உத்தரவிட்டார்.
ஓ பிரையன்:
முன்னதாக அந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய ஓ பிரையன், “இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்கிறேன். கூட்டாட்சியின் சாட்சி தான் நரேந்திர மோடி. அவர் பிரதமராகும் முன்பு முதல்வராகவே இருந்தார். இப்படி ஜனநாயகத்தின் குழந்தையாக இருந்த நபர் ஏன் ஜனநாயகத்தை சிதைக்கிறார். நாடாளுமன்றத்தில் இப்போது நிறைவேற்றப்படும் மசோதாக்களில் மூன்றில் ஒரு பங்கு கூட்டாட்சிக்கு எதிராகவே இருக்கிறது. உயர்கல்விக்குச் சிறப்பு பட்ஜெட்டாக ₹ 40,000 கோடியை ஒதுக்கிவிட்டு, மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கு ₹ 700 கோடி ஏன் கொடுக்க வேண்டும்.
கடும் தாக்கு:
நீங்கள் எங்களுக்கு (மே. வங்க அரசு) கொடுக்க வேண்டிய ₹ 12,000 கோடியை வழங்கினாலும் இதுபோன்ற மசோதாவை எதிர்ப்போம். எங்களுக்கு நீங்கள் தர வேண்டிய ₹ 12,000 கோடியை வலியுறுத்தி அக்டோபர் 12ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். கடந்த 20 மாதங்களில் நீங்கள் 160 தூதுக்குழுக்களை அனுப்புகிறீர்கள். பாஜக ஆட்சியுள்ள மாநிலங்களில் என்ன செய்துள்ளீர்கள். நாட்டிலேயே அதிக கொலைகள் நடக்கும் உத்தரப் பிரதேசத்துக்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்பியுள்ளீர்கள்? ம.பி-இல் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கிறது” என்று அவர் பேசினார்.
அமர மறுப்பு:
அப்போது குறுக்கிட்ட தன்கர், டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்து மட்டுமே பேசுமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் அதற்கு ஓ பிரையன், “இது ஒரு அரசியல் அரங்கம்.. நாங்கள் அரசியல் குறித்தது பேசலாம்” என்று அவர் தெரிவித்தார். அப்போது அவரை அமரச் சொன்ன அவை தலைவர், இதுபோன்ற நடந்து கொள்வது சரியான போக்கு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் ஓ பிரையன் அமர மறுத்துத் தொடர்ந்து பேசினார். ஓ பிரையன் மேலும், “குடும்ப அரசியல்.. குடும்ப அரசியல் எனச் சொல்கிறீர்களே.
முடிந்தால் ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே எம்பியாக முடியும் என்று சட்டத்தை கொண்டு வாருங்கள்” என்று அவர் தெரிவித்தார். இதைக் கேட்டுக் கோபமடைந்த ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், “இதுபோன்ற டிராமாவை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார். பின்னர் ஓ பிரைன் பேச முயன்ற போதிலும், ஆளும் தரப்பை அவரை பேச விடாமல் கோஷமிட்டன. ஓ பிரைன் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய தன்கர்,
அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.