மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையை அடுத்த முட்டுக்காடில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய கல்வி நிறுவனம், ‘மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான யோகா’ என்ற தேசிய அளவிலான வலைதள கருத்தரங்கை இன்று நடத்தியது.
சர்வதேச யோகா தினம் நாளை (ஜூன் 21, 2023) கொண்டாடப்படவிருப்பத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்ட யோகா ஆசனங்கள் செய்து காட்டப்பட்டன.
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிசிகேத ரௌத், நம்மைச் சுற்றியுள்ள நீர், காற்று, இயற்கை போன்றவற்றுடன் யோகா பயிற்சி மனிதர்களை இணைப்பதாகக் கூறினார்.
இந்தியாவில் பிறந்த யோகா பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் உலக நாடுகளும் இதன் அடிப்படைத் தன்மையைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். யோகாவின் இந்த ஆதார விஷயத்தை உணர்ந்து கொண்டால் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனை எழாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த வலைதள கருத்தரங்கின்போது, கல்வி நிறுவனத்தின் யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி சிறார்கள் சில உபகரணங்களின் உதவியோடு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். பர்வதாசனா, யோகமுத்ராசனா, சேதுபந்தாசனா, புஜங்காசனா, அர்த்தஷலபாசனா, தனுராசனா, பாதஹஸ்தாசன முதலிய ஏராளமான ஆசனங்களுக்கு அவற்றின் பலன்களோடு, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
உடல் ஆரோக்கியத்தைப் பேணும் யோகா பயிற்சியை மாற்றுத்திறனாளிகளும் பயில்வதற்கு ஏதுவாக, ஆசனங்களில் சில மாறுபாடுகள் செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய கல்வி நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு கற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் உடல் நலன், ஞாபக ஆற்றல் முதலியவை வளர்வதோடு, தூக்கமின்மை, கவலை போன்ற பிரச்சினைகள் குறைந்துள்ளன.