திமுக ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது என பிரதமர் விமர்சனம் செய்தற்கு ‛ஆமாம்’ என ஒப்புக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசியில் ட்விட்ஸ்ட் வைத்து மோடியை விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதில் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் தற்போது ‛இந்தியா’ கூட்டணி உருவாகி உள்ளது.
இந்த கூட்டணி உருவானது முதல் பிரதமர் மோடி உள்பட பல பாஜக தலைவர்கள் ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ஸ்மிருதி இரானி உள்பட பல தலைவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி திமுகவை விமர்சனம் செய்தபோது, ‛‛தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது. இதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என விமர்சனம் செய்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது புதுக்கோட்டை திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
சிஏஜி அறிக்கைக்கு பின் மத்திய அரசின் பல துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரமணா’ பட பாணியில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கியதாக கணக்கெழுதி மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பலனடைந்த ஒரே குடும்பம் அதானியின் குடும்பம் மட்டுமே மேலும், நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க களமிறங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த சேலத்தில் ஒன்று திரள்வோம். பிரதமர் குற்றம் சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது கருணாநிதி குடும்பம் தான். ஏனெனில் இங்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருணாநிதி குடும்பம் தான்” என தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.