மகளிர் உரிமைத்தொகை விவகாரம். மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மறுப்பதாக சொல்லி ஆகஸ்ட் 7ல் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்-TARATDAC மாநிலக்குழுக் கூட்டம் ஜூலை-30 ஞாயிறு அன்று தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்ப தலைவிகளுக்கும் வழங்கக் கோரி இக்கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
விபரம் வருமாறு:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப் 15 முதல் செயல்படுத்த தமிழக அரசு எடுத்து வருகிற நடவடிக்கைகளை எமது சங்கம் வரவேற்கிறது. குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவது சிறப்பிற்குரியது. இத்திட்டத்தின் பலன்கள் அனைத்து ஏழை குடும்ப தலைவிகளுக்கும் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
4 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு:
சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500/- பெற்று வருகிற மாற்றுத்திறனாளி யாரேனும் ஒருவர் குடும்பத்தில் இருந்தால், அந்த குடும்பத்தின் தலைவி மகளிர் உரிமை தொகை பெற முடியாது என நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்கள் பாதிக்கப்படுவர். இந்த குடும்பங்கள் பெருத்த ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் உள்ளன.
“மாற்றுத்திறனாளிகளை குடும்பமும், சமூகமும் பொதுவாக புறக்கணிக்கின்ற சூழ்நிலையில், குடும்பத் தலைவிக்கான மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு மாற்றுத்திறனாளி தடையாக இருக்கிறார் என்ற காரணத்தினால், குடும்பங்களில் மாற்றத்தினாளி மீது கோபமும், வெறுப்பும், புறக்கணிப்பும் இன்னும் கூடுதலான பிரச்சனையாக வந்து சேரும்” நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மருமகள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்.
வறுமையில் மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட வாழ்நாள் முழுவதும் கூடுதல் செலவு செய்வதால், அத்தகைய குடும்பங்கள் வாழ்நாள் சுமையை சந்திக்கிறது என இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான ஐ.நா. சிறப்பு மாநாட்டு சாசனம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்கள் கொடிய ஏழ்மை நிலையில் இருப்பதை பல்வேறு ஆய்வுகளும், ஆவணங்களும் வெளிப்படுத்தி உள்ளதையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
மாற்றுத்திறனாளிகளுடைய கூடுதல் செலவுகள, சுமைகளை ஈடு செய்ய வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை, மற்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் தொகைகளுடன் எந்த வகையிலும் காரணம் காட்டக்கூடாது என்பதை எமது சங்கத்தின் சார்பில் தமிழக அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். எனவே, மாதாந்திர உதவித்தொகையை காரணம் காட்டி, குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கக் கூடாது என்பதை தமிழக
அரசுக்கு வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.
லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமாக வகுக்கப்பட்டுள்ள இந்த விதியை தளர்த்தி, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிட உரிய உத்தரவுகள் பிறப்பிக்க
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆக:7 – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்:
இந்தக் கோரிக்கையின் மீது தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திட, ஆக:7 திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட,
ஒன்றிய தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கன சங்க மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என சங்கத்தின் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.