சட்டவிரோதமாக இயங்கி வந்த மணல் குவாரியை ஆய்வு செய்ய சென்ற பெண் அதிகாரி உற்பட மூவரை மணல் கடத்தல் கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அந்த பெண் சுரங்க அதிகாரியை தரதரவென இழுத்துசென்று , கற்களை விசீ தாக்குதல் நடத்தும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் மணல் கடத்தல், கள்ளச்சாராயம் போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகம் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தடுக்க செல்லும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் அதிர்ச்சி சம்பவங்கள் சில நேரங்களில் நடக்கின்றன.

அந்த வகையில் தான் தற்போது பீகாரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல், கடத்தலை தடுக்க சென்ற பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே உள்ள பிஹ்தா என்ற நகரம் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்த சுரங்க (mining) துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலாக ஆய்வு மேற்கொள்ள சென்றார். அவருடன் இரு ஆய்வாளர்களும் சென்று இருந்தனர்.
இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய வழக்கில் 44- பேரை போலீசார் கைது செய்தனர். அவகளுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “மணல் குவாரியை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட சுரங்க அதிகரியை சமூக விரோத கும்பல் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 44 பேரை கைது செய்து இருக்கிறோம். மாவட்ட சுரங்க அதிகாரி மற்றும் அவருடன் சென்ற இரண்டு ஆய்வாளர்கள் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர்” என்றார்.