திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள க.பங்களாவை சேர்ந்த 59 வயதாகும் கோபி அங்கு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இவரது மனைவி தமயந்தி (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் (60) இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் ராஜாங்கத்தின் குடும்பத்திற்கும், அவரது தம்பியான கோபியின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது இந்தநிலையில்
நிலப்பிரச்சினை வழக்கை தீவிரமாக எடுத்து வழக்கை சீக்கிரம் முடிக்க விரும்பிய தமயந்தி, வழக்கறிஞரை முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் உலுப்பக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஏறினார்.

அதே பேருந்தில் அதே பஸ்சில் ராஜாங்கமும் வந்தார். கோபால்பட்டி அருகே தி.வடுகப்பட்டி பகுதியில் அந்த பஸ் வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆத்திரத்துடன் வேகமாக சென்றார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் தமயந்தியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தார். இதில், சம்பவ இடத்திலேயே தமயந்தி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சில வினாடிகளில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். பின்னர் அங்கிருந்து ராஜாங்கம் தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய ராஜாங்கத்தை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் ராஜாங்கத்தின் மூத்த மகன் வீரதேவேந்திரநேசிக்கு (20) நேற்று காலை ராஜாங்கம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
உடனே செல்போன் சிக்னலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி அவரை போலீசார் தேடினர்.
அப்போது ராஜாங்கம் நண்பகல் 12 மணி அளவில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜாங்கத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்

வாக்குமூலம்: பின்னர் போலீசார் அவரை சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ராஜாங்கம் போலீசாரிடம் கொலை செய்தது ஏன் என்று வாக்குமூலம் அளித்தார்
அப்போது ராஜாங்கம் கூறியதாவது: கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் எங்களுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.
இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக எனக்கும், எனது தம்பி கோபிக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து எனது தம்பியும், அவரது மனைவி தமயந்தியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரச்சினை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக தமயந்தி நிலப்பிரச்சினை வழக்கு தொடர்பாக வக்கீலை சந்தித்து தீவிரம் காட்டினார்.
இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி, அவரை சில நாட்களாக கண்காணித்து வந்தேன்.

இதற்கிடையே “நேற்று முன்தினம் அவர் க.பங்களா பிரிவு பகுதி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த நானும் அங்கு வந்தேன்”.
அப்போது “அவர் ஏறிய பஸ்சில், நானும் ஏறினேன். பின்னர் ஓடும் பஸ்சிலேயே தமயந்தியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ராஜாங்கத்தை போலீசார் கைது செய்து, திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.