- சென்னையில் இன்று எந்த விமானமும் ரத்து செய்யப்படைவில்லை. சில விமானங்கள் மட்டும் தாமதம் ஆகியுள்ளன என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ஒருவேளை விமானங்கள் தாமதம் ஆனாலோ, ரத்து செய்யப்பட்டாலோ, பயணிகளுக்கு உரிய நேரத்தில் விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை மழை பெய்த நிலையில் காலையில் நின்று விட்டது. ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இன்று காலையிலும் மழை பெய்தது. காலை 7 மணி முதல் 9 மணி வரை ஒருசில இடங்களில் மழை பெய்தது.
இதனிடையே, கனமழையின் போது விமானங்களை இயக்குவது தொடர்பாக சென்னை விமான போக்குவரத்து அதிகாரிகளின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு விமான போக்குவரத்து ஆணைய (AAI) அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் இன்று எந்த விமானமும் ரத்து செய்யப்படைவில்லை. சில விமானங்கள் தாமதம் மட்டும் ஆகியுள்ளன” என்று கூறினர்.
விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது குறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கனமழை காரணமாக விமானத்தில் சரக்குகளை உரிய நேரத்தில் ஏற்ற முடியவில்லை. இதனால், சில விமானங்கள தாமதம் ஆகின. விமானங்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மாறினால் விமானங்கள் தாமதம் ஆகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்” என்றனர்.
இன்றும் நாளையும் வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை விமானங்கள் தாமதம் ஆனாலோ, ரத்து செய்யப்பட்டாலோ, பயணிகளுக்கு உரிய நேரத்தில் விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பயணிகள் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பாக விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமான புறப்பாடு குறித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது வலுப்பெற்றுள்ளது. இன்று காலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறியுள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/leave-schools-due-to-rain-do-not-conduct-online-classes-minister-anbil-mahesh-request/
பருவமழை தொடங்கும் நேரத்தில் அல்லது பருவமழை காலக்கட்டத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்து வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கியதோ, எங்கெல்லாம் பாதிப்புகள் அதிகமாக இருந்ததோ அந்த இடங்களில் கூடுதலாக வடிகால் பணிகள் செய்யப்பட்டது. அந்த இடங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள், மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கபட்டு உள்ளனர்.