மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோயில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? வானதி கேள்வி

0
73

தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்னை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நேற்று (3-10-2023) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி , “தென் பாரதத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள் சூறையாடப்படுகின்றன. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை” என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டு இந்துக்களின் மிகமிக முக்கியமான பிரச்னை குறித்து அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பிரதமர் பதிவு செய்திருக்கிறார். இதனால், யாரும் கண்டுகொள்ளாத தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்னை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி

மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால், மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை அந்தந்த மதத்தினரே நிர்வகின்றனர். அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் அந்தந்த மதத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இந்து கோயில்களை மட்டும் நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில், மக்களுக்கு இந்து ஆன்மிக கல்வி கூட அளிப்பதில்லை. விநாயகர் சதுர்த்திக்கு கூட ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து தடுக்கப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தில்லை தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்து சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை, தன் கட்டுக்குள் கொண்டுவர, திமுக அரசு முயற்சிக்கிறது.

வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. மதச்சார்பற்ற அரசுக்கு மத விவகாரங்களில், கோயில் நிர்வாகங்களில் தலையிட உரிமை இல்லை. ஆனால், அனைத்தையும் மீறி, இந்து கோயில்களை மட்டும் ஆக்கிரமித்துள்ளது திமுக அரசு.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடம் கோயில்கள் இருப்பதால், அவை எப்படி நிர்வகிக்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதிக வருமானம் வரும், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை. கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகை வந்தாலே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போல ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவமனை, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு மேல்நிலைப் பள்ளி நடத்த முடியும்.

ஆனால், கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகையை வசூலிக்கவோ, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவோ கோயில்களை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில்களை, இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த உண்மையைத்தான் நிஜாமாபாத்தில் பிரதமர் மோடி அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, மதச்சார்பின்மையை காக்க, இந்து கோயில்களில் அரசு வெளியேற வேண்டு. இந்துக்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here