அதிமுக உள்கட்சி பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட விரும்பவில்லை என்றும், அதை அமித்ஷா, ஜேபி நட்டா போன்றவர்களின் விட்டுவிடுவார் எனவும் பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ள நிலையில் அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை இதுவரை சந்திக்காத நிலையில் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.
வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தரும்போது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை சந்தித்து பேசுவதற்காக போட்டிபோடுவது வழக்கம்.

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் இருவரையும் சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் அளித்து உள்ள சிறப்பு நேர்காணலில் பேசி இருப்பதாவது, “அதிமுக போன்ற கட்சிகள் கடந்து வந்த பாதையை தொண்டர்களின் பார்வையில் பார்க்கும்போது இது மிகவும் வருத்தம் தரக்கூடிய விசயம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் காலத்தில் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் வீட்டுக்கே போய் சந்தித்து வந்த வரலாறு எல்லாம் நடந்து உள்ளது. மோடி, அருண் ஜெட்லி போன்றவர்கள் வீட்டுக்கேபோய் சந்தித்து வந்தார்கள். எம்ஜிஆர் வீட்டுக்கு இந்திரா காந்தி எல்லாம் சென்று உள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் பிரதமரை சந்திப்பதையே ஆயுட்கால சாதனையாக நினைத்து சந்தித்தாலே சாப விமோட்சனம் கிடைத்துவிடும் என்று எண்ணும் மனநிலை அதிமுக தொண்டர்களை மிகவும் அவமதிக்கும் விசயமாகும்.
சந்திப்பதும் மரியாதை கொடுப்பதும் என்பது வேறு விசயம். ஒவ்வொரு முறையும் சந்திப்பது கட்டாயமா என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.
அப்போது நீங்கள் ஏன் சந்திக்கிறீர்கள்? அமித்ஷாவை சந்திப்பது கட்டாயமா என்றார். கட்சி ரீதியாக அமித்ஷாவும் மோடியும் ஒன்றுதான். அப்போது அவர்களை சந்திக்காமல் இருக்கலாமே?
ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்கவே கூடாது என்று வேறு கோரிக்கை விடுக்கிறார்கள். நாங்கள்தான் கட்சி. ஓபிஎஸை பிரதமர் சந்தித்தால் அதை வைத்து அரசியல் செய்வார் என்று சொல்கிறார்கள். பிரதமர் மோடி ஓபிஎஸை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. வரவேற்பதற்கும், விடை கொடுப்பதற்கும்தான் அனுமதிக்கிறார்கள். பாஜகவின் பார்வையில் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் இல்லை.
அதிமுக பிளவுபட்டு கிடப்பதாகவே அவர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ் ஒன்றாக இருந்தால் அதிமுக வாக்குகளை பெற முடியும் என்பது பாஜகவின் பார்வை.

முக்குலத்தோர் சமூகத்தில் நூற்றில் 90% பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளார்கள். செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் இதை சமாளிக்கும் வகையில் பெரிய ஆட்கள்.
அவர்களுக்கு பிரச்சனை உள்ளது. 10.5% இடஒதுக்கீட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு துரோகம் செய்ததாக நினைக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்கில் 90% ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு இருக்கும்போது அவர்களையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பது பாஜகவுக்கு தெரியும்.
முன்னாள் முதலமைச்சர் என்று அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அமைச்சர்களுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவரும் நிற்பார். பிரதமர் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றே நினைப்பார். இவர்கள் கட்சிக்கு உள்ளே நடக்கும் பிரச்சனை நமக்கு தேவையில்லை என்ற எண்ணத்திலே இவர்களை பார்க்காமல் தவிர்த்திருக்கலாம்.