உலக கோப்பை தொடரில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் முதல் வெற்றிக்காக இன்று லக்னோவில் களம் காண உள்ளன. இந்தியாவில் ஐசிசி உலக கோப்பைத் தொடர் தொடங்கி 10 நாட்கள் ஆகி விட்டன. பெரும்பான்மையான அணிகள் தலா 2 முதல் 3 ஆட்டங்களில் ஆடி உள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, நெதர்லாந்து, அணிகள் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

இவற்றில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் முன்னாள் சாம்பியன்கள். ஆஸ்திரேலியா 5 முறையும், இலங்கை ஒரு முறையும் சாம்பியன் பட்டங்களை வசப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தாங்கள் விளையாடிய முதல் 2 லீக் ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளன. அதனால் இந்த 2 அணிகளும் முதல் வெற்றி பெறும் முனைப்பில் தங்களின் 3வது லீக் ஆட்டத்தில் இன்று களம் காண உள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி என 2 அணிகளும் ‘வெற்றிக்காக’ கட்டாயம் மாற்றங்களுடன் களம் இறங்குவார்கள். எப்படி இருந்தாலும் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க போராடும் இந்த 2 அணிகளில் ஒரு அணிக்கு இன்று ‘முதல்’ வெற்றி நிச்சயம். மற்றொரு அணிக்கு ஹாட்ரிக் தோல்வி கட்டாயம்.
கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 5 ஆட்டங்களில் இலங்கை 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. உலக கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான இந்த 2 அணிகளும் உலக கோப்பை தொடர்களில் 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியா 8லும், இலங்கை 2லும் வெற்றி வாகை சூடியுள்ளன, ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

நடப்புத் தொடரில் ஆஸ்திரேலியா அணி சென்னையில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்காவிடம் 134ரன் வித்தியாசத்திலும் வீழ்ந்தது. இலங்கை அணி டெல்லியில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்காவிடம் 102 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.