- கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலங்களைஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்னென்ன?
அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. கத்தப்பாறை, ஆத்தூர் ஆகிய பகுதியில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் கோவிலுக்கு உரிய வருமானம் இன்றி, கோவிலின் பூைஜ உள்ளிட்டவை நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே கோவில் நிலத்தை மீட்க ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை மீட்க அறநிலையத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவு இதுவரை முறையாக பின்பற்றி, நிலங்கள் மீட்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் புகார் குறித்து பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு பலர் தங்களின் பெயர்களில் பட்டா வாங்கியுள்ளனர். இதெல்லாம் அறநிலையத்துறை அதிகாரிகளின் உடந்தை இன்றி நடக்க வாய்ப்பில்லை.
இந்த நிலங்களை மீட்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறும் அறிக்கை ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.எனவே அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பணியாற்றும் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் பணியாற்றும் இணை கமிஷனர் உள்ளிட்ட அனைத்து அறநிலையத்துறை அதிகாரிகளும் வருகிற 23-ந்தேதி இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
அதேபோல கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டும். அப்போது சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.