தலையங்கம்….
இதற்கு முன்னர் வீட்டில் உள்ள யாருக்காவது திருமணம் என்றால் நகை எடுத்தாச்சா?, பட்டுப்புடவை எடுத்தாச்சா?, பொண்ணுக்கு என்ன? நகை, மாப்பிள்ளைக்கு என்ன? நகை, திருமண மண்டபம் பதிவு செய்தாச்சா? எவ்வளவு வாடகை? இப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலும் திருமண பேச்சுகள் நடந்து வந்தன. இப்போது எல்லாம் அப்படி திருமண பேச்சுகள் நடக்காது போல தெரிகிறது. ஆமாம் நேற்று அரசு வெளியிட்டிருந்த ஒரு சட்ட திருத்தம். தமிழகத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது பரிமாற அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என்பது தான் அந்த அறிக்கை. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறலாம், மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதி வழங்கலாம், என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருபுறம் வரையறுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் கள்ளத்தனமாக பார்களில் மது விற்பனை நடந்து மனித சமூகத்தை பெரிய அளவில் சீரழிப்பதாக ஆண்கள் கருதுகிறார்களோ இல்லையோ, பெண்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சட்ட திருத்தம் செயலாளரிடமிருந்து வந்துள்ளது தான் கவனம் பெற்று இருக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதை அரசின் கொள்கை என்று முதலமைச்சர் தொடங்கி மூத்த தலைவர்கள், திமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆகியோர் பேசி வந்த நிலையில் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் என பலரும் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்க, சமூக வலைதளங்களும் பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்கள் கவலைகளை பதிவிட்டு வந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு விளக்கம் அளிக்கிறார்.
முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற சர்வதேச நிகழ்வுகள் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் உள்ள இடங்களில் மது பரிமாற அனுமதிக்கப்படும் என்று அவர் அந்த விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ள போதிலும் அரசிதழ் அறிவிப்பால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதாக இல்லை.
ஒன்று அரசிதழில் வெளியிட்ட அந்த அறிக்கையை அரசு திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் மாற்று அறிக்கை ஒன்றை தர வேண்டும். இது எதுவும் இல்லாமல் துறை சார்ந்த செயலாளர். அரசிதழில் அறிவிப்பை வெளியிடுவதும், மக்களின் கொந்தளிப்பை கண்டு அமைச்சர் அதற்கு விளக்கம் அளிப்பதாக ஒரு பேட்டி கொடுப்பதும் என்ன நிலைபாடு என்று அறியாமல் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள்.
தமிழக அரசு கஜானாவை நிரப்புவதற்கு ஒரே வழி மது விற்பனை தான் என்கிற கொள்கை முடிவு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. தமிழகத்தில் இயங்கும் எந்த துறைகளிலும் பெரிய அளவு வருமானம் இல்லை. அதற்காக போகிற, வருகிற எல்லோரையும் கட்டாயம் மது குடிக்க வேண்டும் என்று சட்டமா இயற்ற முடியும்.
ஒரு பக்கம் மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து வருவதை எல்லோரும் உணர்வார்கள். ஒரு கடைக்கு சென்று வர வேண்டும் என்று சொன்னால் ஒரு சாமானிய மனிதனுக்கு 500 ரூபாய் தேவை. அதற்கான போதிய வருமானம் அவரிடம் இல்லை இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், அரசு வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவது என்பது இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை எங்களுக்கு வருமானம் தான் குறிக்கோள் என்கிற நிலையில் இந்த அரசு தொடருமானால், இனி எப்போதும் இந்த அரசு ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எல்லா கட்சிகளும் சம பலத்தோடு தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால் எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அந்த கட்சிகளை ஆதரிக்கவும் மாட்டார்கள். என்பது அரசியல் தலைவர்களுக்கு தெரிந்ததே. தெரிந்தும் இப்படி ஒரு தவறை செய்து கொண்டே இருந்தால் மக்கள் என்ன ஆவார்கள்.
ஏற்கனவே இயங்கும் மதுபான கடைகளால் போதையில் தடுமாறும் இளைஞர்கள் ஒரு பக்கம், போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சமூக விரோத செயலில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றொரு பக்கம், என மக்கள் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது போன்ற ஒரு அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டு இருப்பது மக்களை ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழக்க செய்வதை தவிர வேறு எதுவும் வழி இல்லை.
இப்போது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை ஆட்சியாளர்கள் அந்த அரசாணை திரும்ப பெறுகிறோம் என்று வெளிப்படையாகவே அறிவிக்க வேண்டும். அதனை முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அப்படி செய்வதால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இல்லை என்றால் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விடும்.